நான் ஏற்றுக் கொண்டு நேசித்த தலைவர் பிரபா!
பிரபாகரனை ஒரு காலத்தில் தலைவராக ஏற்று நேசித்து இருந்தார் என்று பகிரங்கமாக தெரிவித்து உள்ளார் சிவநேசதுரை சந்திரகாந்தன். மட்டக்களப்பு மாவட்டத்தின் துறைநீலாவணையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள சித்திவிநாயகர் வித்தியாலயத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றியபோதே இவர் இவ்வாறு கூறி இருந்தார்.
இவர் இங்கு முக்கியமாக குறிப்பிட்டவை வருமாறு:
ஒரு காலத்தில் நான் பிரபாகரனை தலைவராக ஏற்று நேசித்தவன். இருந்தாலும் அவரது தவறுகளை சுட்டிக் காட்டித்தான் ஆக வேண்டும். பிரபாகரன் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளத் தவறி விட்டார். ஏற்றுக் கொண்டிருப்பாரானால் சமஷ்டியை விடவும் அதிகமான அதிகாரங்களை உடையதும் தமிழீழம் அளவிலானதுமான அரசு கிடைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கின்றது.
யார் என்ன சொன்னாலும் பிரபாகரனின் மரணத்தில் இந்தியாவின் பங்கு அதிகமாக இருக்கின்றது. பிரபாகரனை கொன்றதாக அரசு கூறுகின்றது. ஆனால் இவரின் மரணத்திலும், அழிவுகளிலும் வெளிநாடுகளுக்கு 75 சதவீத பங்கு உண்டு. தமிழ் தேசியக் கூட்டமைப்பு - தமிழரசுக்கட்சி செய்வது வெறும் கட்சி அரசியல்தான் அதில் தமிழ் மக்களின் நலன் சார்ந்த விடயம் எதுவும் கிடையாது.
கூட்டமைப்பு இப்போது பல முகங்களைக் காட்ட வேண்டியிருக்கிறது. சிவில் சமூகம் என்கிறவர்களுக்கு ஒரு முகத்தை காட்டுகிறது. சிவில் சமூகத்தினர் தேர்தலில் குதித்து விடுவார்கள் என்கிற பயம் கூட்டமைப்புக்கு.
வெளிநாடுகளில் இருப்பவர்கள் நிதி கொடுக்கிறார்கள் என்பதற்காக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இன்னொரு முகத்தை காட்டுகின்றது. அரசுக்கு இன்னொரு முகத்தை காட்டுகின்றது. இப்படியெல்லாம் பார்க்கின்றபோது கூட்டமைப்புக்கு தெளிவான கொள்கை கிடையாது.
ஒருவர் ஒரு கடிதம் எழுதுகின்றபோது பொறுப்புள்ள அரசியல் கட்சி அதற்கு ஒரு பதிலையாவது அனுப்பி இருக்கும். எதிர்காலத்தில் இது குறித்து யோசிக்கலாம் என்றாவது ஒரு பதில் எழுதி இருப்பார்கள். அதனைக் கூட கூட்டமைப்பு செய்யவில்லை. இதிலிருந்து கூட்டமைப்பு பொறுப்பு உள்ள அரசியல் கட்சி அல்ல என்பது தெரிகிறது.
வடக்கு கிழக்கு இணைப்பு இடம்பெறுகின்ற பட்சத்தில் முஸ்லிம்களின் தனி அலகை எவ்வாறு பிரித்துக் கொடுப்பார்கள்? அந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்த்து வைப்பார்கள்? கிழக்கில் உள்ள சிங்களவர்களின் இருப்பு எப்படியிருக்கும்? என்றெல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டி உள்ளது.
அச்சுப்பிரதி
பதிவுசெய்யப்பட்டது: 23 Feb 2012 செய்தி மூலம்: tamilcnn