eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
இராணுவ முற்றுகைக்கு பின்பே உறவுகள் காணாமல் போயினர்!
கடந்த 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை வடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் நிய மிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணை கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றுக்காலை 9.30 மணியளவில் ஸ்கந்தபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பமானது.

காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர் மக்வெல் பராக்ரம பரனஹம ஆணைக்குழுவின் ஆணையாளர்களான சுரண்யனா வித்ய வத்னே, மனோராமநாதன் ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணை ஆரம்பமானது.

இதன்போதே காணாமல் போனவர்களின் உறவினர்கள் மேற்கண்டவாறு ஆணைக்குழுவிடம் முறையிட்டனர்.

விசாரணை ஆரம்பம்

யுத்தகாலத்தில் வடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணை நேற்றுக்காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி மாலை 6 மணி வரை இடம்பெற்றது.

விசாரணைக்கு வருமாறு ஆணைக்குழுவினால் அழைப்புவிடுக்கப்பட்ட 35 பேரிடம் நேற்று முதற்கட்டமாக 27 பேரிடம் மட்டுமே விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட ஸ்கந்தபுரம், அக்கராயன் குளம், கண்ணகைபுரம் ஆகிய மூன்று கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

புலிகள் மீது புகார்

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந்த விசாரணைக்குழுவிற்கு சாட்சியமளித்தவர்களில் அதிகளவானோரில் குறிப்பிட்டசிலர்; தமிழீழ விடுதலைப்புலிகள் தமது உறவினர்களைவீட்டில் வந்து தமது அமைப்பில் இணைத்துக்கொண்டதாகவும் இதில் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்தனர்.

உறவுகளை மீட்டுத்தாருங்கள்

அரசாங்கத்தின் உதவிகள் நட்ட ஈடுகள் எதுவும் எமக்குத்தேவையில்லை. காணாமல்போன உறவினர்களை மீட்டுத்தந்தாலே போதும். கடந்த ஐந்து வருடங்களாக எமது உறவினர்களைத்தேடி அலைகின்றோம்.காலத்திற்கு காலம் ஒவ்வொரு விசாரணைக்குழுக்களை அமைத்து கொண்டிருக்கும் இந்த அரசாங்கம் எப்போது எமது உறவுகளை மீட்டத்தரப்போகின்றது என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினர்.

மாற்றம்

காணாமல்போன உறவினர்களைத்தான் நாம் தேடுகின்றோம். நாம் ஒன்றும் குற்றவாளிகளல்ல எம்மிடம் விசாரணை செய்வதற்கு. விசாரணை என்ற சொற்பதத்தை மாற்ற வேண்டும் என்ற உறவினர்களின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை என்ற சொல்லுக்கு பதிலாக விசாரித்தல் அல்லது பரிசீலனை செய்தல் என மாற்றம் செய்தனர்.

உயிரோடுதான் உள்ளனர்.

காணாமல் போன உங்கள் உறவினர்கள் உயிரோடுதான் உள்ளனர் என்று நீங்கள் நம்புகின்றீர்களா என ஆணைக்குழுவின் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உற வினர்கள் ஆம் எமது பிள்ளைகள் (உறவினர்கள்) உயிரோடுதான் உள்ளனர்.100 நூறுவீதம் எமக்கு நம்பிக்கையுள்ளது. எமது உறவினர்கள் உயிரோடுதான் உள்ளனர் எனத் தெரிவித்தனர்.

18 வயதுக்குட்பட்டவர்கள்

காணாமல்போனவர்கள் தொடர்பாக இடம்பெற்ற இந்த விசாரணைக்கு சமுகமளித்தவர்கள் பலரில் தமது பிள்ளைகள் காணாமல் போனதாகவும் அதிலும் குறிப்பாக 18 வயதிற்குட்பட்ட (பெண்பிள்ளைகள் உட்பட) பிள்ளைகளே அதிகம் காணாமல் போனதாகவும் உறவினர்களினால் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டது.

இராணுவ பொக்ஸ்

இறுதிக்கட்டப் போரில் இராணுவம் பொக்ஸ் அடித்து பிடித்த பின்பே தமது உறவினர்கள் காணாமல் போனார்கள் எனவும் தமது உறவினர்களை 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும் அவர்களைக் கண்டதாகவும் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்பே அவரகள் காணாமல்போனதாகவும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்தனர். அத்தோடு இராணுவத்தினர் பிடிக்கும் வரை அவர்களைப் பலர் கண்டுமுள்ளனர். எனவே எமது பிள்ளைகள் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டபின்புதான் காணாமல் போயுள்ளனர் எனக்கூறவேண்டியுள்ளது.

இராணுவம்தான்

இராணுவக் கட்டுப்பாட்டு பிரிவிற்குள் எனது கணவன் காணாமல் போனதால் இராணுவம் தான் அவரைக்கடத்தியிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றேன் என குடும்பப் பெண் ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.

உடல்களை கொடுத்தனரா?

இறுதியுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழீழ விடுதலைப்புலிகள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்தனரா என காணாமல் போனவர்களின் உற வினர்களிடம் ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பியபோது தம்மிடம் கிடைத்த உடல்களை புலிகள் அவர்களின் உறவினர்களிடம் கொடுத்தனர் என உறவினர்கள் பதிலளித்தனர்.

வருமானத்திற்கு என்ன செய்கிறீர்கள்.

காணாமல் போனோரின் உறவினர்கள் பலர் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பத்தினர். அவர்களுடைய வருமானம் குடும்பத்தலைவர்கள் இல்லாததால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

இதனைவிட யுத்தத்தின் போது கணவனையும் பிள்ளைகளையும் இழந்த நிலையில் (காணாமல் போயுள்ளனர்) பல குடும்பங்கள் உள்ளன.

எனவே நேற்றை விசாரணைக்கு வருகை தந்த காணாமல் போனோரின் உறவினர்களிடம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினர் குடும்ப வருமானத்திற்கு என்ன செய்கிறீர்கள் என்ன கேள்வியினை பிரதானமாக எழுப்பியிருந்த தோடு வருமானத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தனர்.

யாரையும் பாதுகாப்பது நோக்கமல்ல

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு என்பதற்கு அப்பால் சுதந்திரமாகவும நம்பிக்கைக்கு உரியதாகவும் இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெறும். யாரையும் பாதுகாப்பது எமது நோக் கமல்ல? குற்றம் செய்தவர்களை சட் டத்தின் முன்நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதோடு மட்டும் நின்றுவிடாது பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தும்.

2009 அதிகம்

நேற்று இடம்பெற்ற இந்த விசாரணையின் போது சமுகமளித்தவர்களில் பலர் தமது உறவினர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு தான் காணாமல்போனார்கள் என்று ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்தனர்.

சம்பிரதாயமல்ல

இந்தவிசாரணை என்பது வெறும் சம்பிரதாய அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதல்ல. யுத்த காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு அவர்கள் தொடர்பில் பொறுப்புக் கூறும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஆணைக்குழு. இதன் விசாரணைகள் நம் பகத்தன்மை வாய்ந்தவை. எனவே காணாமல் போனோரின் உறவினர்கள் தயக்க மின்றி சாட்சியமளிக்களாம்.

காணாமல் போனோர் தொடர்பில் விரக்தியடைந்த உறவுகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கக் கூடிய தாக இவ் விசாரணை அமையும் என ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.

12 வயது சிறுமி

இறுதியுத்தத்தின்போது முள்ளி வாய்க்கால் பகுதியில் குடும்பத்து டன் படுகாயமடைந்தபோது இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆனால் 12 வயதான தனது மகளை இதுவரை காணவில்லையெனவும் மகளை தான் தேடாத இடம் இல்லையெனவும் இராணுவத்தினரால்தான் காயப்பட்டவர்கள் அனைவரும் வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் மாற்றுவலுவுடைய குடும்பப்பெண் ஒருவர் கண்ணீர்மல்க ஆணைகுழுவிடம் சாட்சியமளித்தார்.

எமக்கும் ஆபத்து

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டால் எமக்கும் ஆபத்து தான் என சிரித்தபடி கூறினார் காணாமல் போனவர்கள் தொடர்பான விசா ரணைகளை மேற்கொள்வதற்கென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குவின் தலைவர்.

ஆனால் என்ன அர்த்தத்தில் அவ்வாறு அவர் கூறினார் என்பது விளங்கப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற விசாரணையின் போது; காணா மல்போனவர்களின் உறவினர்கள் கண்ணீர்மல்க தமது உறவினர்களை மீட்டுத்தருமாறு கோரிக்கைவிடுத்ததோடு நாம் உங்களிடம் கொடுப்பது படிவங்கள் அல்ல உறவினர்களின் உயிர்கள் அவர்களை எப்படியாவது மீட்டுத்தாருங்கள் என உருக்கமாககேட்டுக்கொண் டனர்.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 19 Jan 2014 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: வலம்புரி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |