eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
சுமந்திரனின் அறிக்கைக்கு ஈ.பி.ஆர்,எல்,எப் விளக்கம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரின் கூற்றுக்களுக்கு 27.04.2017 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கொள்கை அடிப்படையில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சொல்லைக் கொண்டு பதிலளித்திருப்பதானது அவரது சுய முரண்பாட்டை தமிழ் மக்களுக்கு நன்கு வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த வாய்ப்பை எமக்கு அளித்தமைக்காக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.


2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா.வின் 34ஆவது கூட்டத்தொடரில் 30 ஒன்று தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதற்கு மேலும் இராண்டு கால அவகாசம் வழங்கக்கூடாது என்று கூட்டமைப்பின் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர். கையெழுத்திட்ட 11 பாராளுமன்ற உறுப்பினர்களையும் குறித்து கருத்து தெரிவிக்கையில் முட்டாள்கள் என்று திருவாளர் சுமந்திரன் அவர்கள் விமர்சித்திருந்தார்.

முழு நாடுமே ஒரே தொகுதியாகக் கணிக்கப்பட்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப் படுகிறது. அதில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனாதிபதியை நோக்கி முதுகெலும்பு இருக்கிறதா? என்று கேள்வி கேட்டவர் தான் இந்த திருவாளர் சுமந்திரன்.

சர்வதேச சமூகத்திடம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என்று வலியுறுத்துவதற்;கு பதிலாக அரசாங்கத்துடன் இணைந்து உள்ளக விசாரணை பொறி முறைக்கு ஆதரவளித்து அதனையே தமிழ் மக்களின் விருப்பம் என்று தனது முடிவை தமிழ் மக்களின் முடிவாக அறிவித்தவர் சுமந்திரன். மக்கள் மத்தியில் பணிபுரிபவர்களை விமர்சிப்பதற்கு அவர் அருகதை அற்றவர்.

சர்வதேச அரங்கில் குறிப்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் தீர்மான வரைபை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் திருத்தப்பட்ட வரைபு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது “சர்வதேச பொறி முறையா, கலப்பு பொறி முறையா, உள்ளக பொறி முறையா என்ற சொற்களை பிடித்துக்கொண்டு தொங்கவேண்டாம்" என்றும், அரசியல் தீர்வை பொறுத்தவரையில் ஒற்றை ஆட்சியா, தன்னாட்சியா, சமஸ்டியா என்ற சொற்களைப் பிடித்துக்கொண்டு தொங்கவேண்டாமென்றும் சொல்லுக்கு முக்கியம் கொடுக்காதவர் ஈபிஆர்எல்எப் தலைவர் தெரிவித்த கருத்தில் மட்டும் ஏன் சொல்லை பிடித்துக்கொண்டு தொங்குகிறார்?

தமிழ் தேசிய இனத்தின் தலை விதியை நிர்ணயிக்கக் கூடிய இடத்தில் ஒவ்வொரு சொல்லும் முக்கியமானது என்பதை இவர் உணர்ந்திருக்கிறார் என்பது மேற்படி கட்சித் தலைவரின் சொல்லை கையாண்டிருப்பதிலிருந்து நன்கு புலப்படுகிறது. பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டிய விடயத்தை பேச வேண்டிய மொழியில் உறுதியுடன் பேசுவதற்கு திராணியற்றவர். தனது கையாலாகத் தனத்தை மூடி மறைப்பதற்காகவே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவே நாம் கருதுகின்றோம்.

கொள்கையை, கொள்கையால் எதிர்கொள்ள முடியாதவர், கொள்கை விளக்கம் அளிக்க முடியாதவர் சொல்லைக் காட்டி மிரட்ட முற்படுகிறார். இதன் மூலம் இவர் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வாழ்ந்தவர் அல்ல என்பதனையும் அவர்களின் வட்டார வழக்கு (நாளாந்த நடை முறை) பற்றி ஏதும் அறியாதவர் என்பதனையும் தானே ஒப்புக் கொண்டிருக்கிறார். மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்பட்டவரிடமிருந்து மக்கள் உணர்வுகளையும், மக்கள் மொழிகளையும் எதிர்பார்ப்பது தவறு தான்.

தேசியப் பட்டியல் எம்பியாக இருப்பதால் தன்னால் சில விடயங்களை செய்ய முடியவில்லை என்றும், தேர்ந்தெடுக்கபட்ட பின்னர் எனது செயலை புரிந்து கொள்வீர்கள் என்று சொன்னதிலிருந்தும், அவர் இன்று செயற்படும் முறையைப் பார்ப்பதிலிருந்தும், அவர் எப்படிபட்டவர் என்று தமிழ் சமுதாயம் நன்றாகவே புரிந்திருக்கிறது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மீது ஈபி ஆர் எல் எப் வைத்த விமர்சனமானது கொள்கை சார்ந்தது. இதற்கு ஏராளமான உதாரணங்களை கொடுக்க முடியும். உதாரணமாக தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்திருந்த இரண்டு பேரணிகளின் போதும் வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட ஏராளமான போராட்டங்களின் போதும், அண்மையில் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தின் போதும், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்து விடுவார்கள் என்றும், தென்பகுதி கொந்தளிக்கும் என்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் தொடர்ந்தும் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

இதே தமிழரசுக் கட்சிதான் இன்று வேறு வழியின்றி பூரண ஹர்த்தாலுக்கு தமது ஆதரவையும் வழங்கியுள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதன் மூலம் தமிழரசுக் கட்சியின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளமையையும் வெளிபடுத்த விரும்புகிறோம்.

மக்களின் போராட்டங்களை வழி நடத்த வேண்டியவர்கள் தமது இயலாமையை மறைப்பதற்காக மேற்கண்ட கூற்றுக்களை வெளியிடும் தலைவர்களின் செயற்பாடுகளை மக்களின் மனோ நிலையில் இருந்தும் அவர்களின் உணர்வு நிலையிலிருந்தும் விமர்சிப்பதர்க்கே அந்த சொல் பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இரா.சம்பந்தனை சர்வாதிகாரி என்று தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களே பல்வேறு சான்றுகளைக் சுட்டிக் காட்டி தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்திலும் மாநாட்டிலும் பகிரங்கமாக குறை கூறியிருந்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது நான்கு கட்சிகளின் அங்கத்துவத்தை கொண்ட ஒரு கூட்டமைப்பாகும். அப்படி இருக்கையில் எத்தகைய ஒரு கொள்கை முடிவும் அங்கத்துவ கட்சிகள் ஊடான கலந்தாய்வின் பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும்.

கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தையும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தையும் கூட்டுவதற்கே பலமான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. பல விடயங்கள் கூட்டமைப்பு அங்கத்துவக் கட்சிகளின் ஒப்புதலின்றியே எடுக்கப்பட்டுள்ளன. கூட்டமைப்பில் தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்கள் தலைவரினால் செவிமடிக்கப் படுவதுமில்லை. கூட்டப்படுகின்ற கூட்டங்களில் நீங்கள் சொல்வதை சொல்லுங்கள் முடிவை நானே எடுப்பேன் என்று சொல்பவரை வேறு எந்த மொழியால் அழைப்பது? மக்களுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள், ஒரு தேசிய இனப் பிரச்சனையை தீர்க்க வேண்டியவர்கள் தனியாக மேற்கொள்ளும் முடிவுகள் சரியானதாக இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

உண்மையில் மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பவர்கள் ஏன் அங்கத்துவ கட்சித் தலைவர்களுடன் மனம் விட்டுப் பேச அஞ்ச வேண்டும்? மக்கள் பிரதிநிதிகளை தரக்குறைவாக பேசியவர் கொள்கை அடிப்படியில் வைத்த விமர்சனத்தை சொல்லைக் கொண்டு பதிலளித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அவரின் அரசியல் அறிவு நன்கு வெளிப்படுகிறது. மீண்டும் ஒரு முறை தமிழரசுக் கட்சியினுடைய அரசியல் இயலாமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளித்த திருவாளர் சுமந்திரன் அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகட்டும்.

சிவசக்தி ஆனந்தன் (பா.உ.)

செயலாளர்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 28 Apr 2017 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: செய்தி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |